நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களில் நாட்டில் ஆறு மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதுவரை ஆயிரத்து 836 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்றினால் கிட்டத்தட்ட 700 வீடுகள் பகுதியளவிலும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், திருகோணமலை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, மாத்தளை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் என்பதனால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.