நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நான்கு மாடிகளை கொண்ட கீதாஞ்சலி அமரசூரிய விசாகா நினைவு நூலகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று(வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
விசாகா கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து 96.5 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்புடன் இந்த நூலகத்தை நிர்மாணித்துள்ளது.
விசாகா கல்லூரியின் அதிபர் திருமதி.சந்தமாலி அவிருப்பொல, கல்லூரி மாணவிகள் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து நூலகத் திறப்பு விழாவை குறிக்கும் வகையில் பிரதமரினால் நினைவு பலகை திறந்து வைக்கப்பட்டது.
நூலகத்தை திறந்துவைத்து முதலாவது மாடிக்கு சென்ற பிரதமர் நூலக செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்து விசாகா மாணவி ஒருவருக்கு புத்தகமொன்றை வழங்கிவைத்தார்.
விசாகா கல்லூரியின் அதிபரினால் இதன்போது பிரதமருக்கு நினைவு பரிசொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி திறக்கப்பட்ட கீதாஞ்சலி அமரசூரிய நினைவு நூலகமானது, தற்போது 15000 சதுர அடி பரப்பளவை கொண்ட நிலப்பரப்பில் நான்கு மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் பல்வேறு சிரமங்களை கடந்து பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து இப்புதிய நூலகத்தை விசாகா மாணவிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தேசிய பாடசாலை பணிப்பாளர் கித்சிறி லியனகமகே, விசாகா கல்லூரியின் அதிபர் திருமதி.சந்தமாலி அவிருப்பொல, விசாகா கல்லூரியின் துணை அதிபர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.