கொரோனா நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை பராமரிக்கவே சுகாதார அதிகாரிகளுக்கு பொலிஸார் உதவுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள பேரணியில் கலந்துகொள்ள இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொழும்பு நகருக்கு வருபவர்களை பொலிஸார் தடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எஸ்.ஜே.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் வீரசேகர இந்தக் கருத்தை வெளியிட்டார்.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பராமரிக்க மட்டுமே பொலிஸார் சுகாதார அதிகாரிகளுக்கு உதவியதாகவும் தற்போது எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியது வைரஸ் பரவலை எதிர்த்துப் போராட அரசுக்கு உதவுவதுதான் எனவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் அவை அரசாங்கத்தையும் மக்களையும் அழிக்க மட்டுமே வைரஸுக்கு உதவுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டின் பாதுகாப்பை தாங்கள் உறுதி செய்துள்ளதாகவும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
பொலிசார் வீடுகளுக்குச் சென்று மக்களை இன்று கொழும்பு நகருக்குள் வரவேண்டாம் என்று கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியதாக தெரிவித்த அவர், நீதித்துறை போராட்டத்தை நடத்த அனுமதித்துள்ள நிலையில், அவர்களால் எப்படி மக்களை இவ்வாறு தடுக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.