பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவுக்கு முழுமையாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக, உட்துறை அமைச்சர் பிரீத்தி படேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குரிய அதிநவீன ஆயுதங்கள், பயங்கரவாதப் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை ஹமாஸ் அமைப்பிடம் உள்ளன.
அந்த அமைப்பின் அரசியல் பிரிவுக்கும் இராணுவப் பிரிவுக்கும் இடையே பிரித்தானியா அரசாங்கம் இனியும் வேறுபாடு காட்டாது.
எனவே, ஹமாஸ் அமைப்பு முழுவதையும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடைக்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தால், இனி ஹமாஸ் அமைப்பில் யாராவது இணைந்தாலோ, அந்த அமைப்புக்கு ஆதரவாகப் பேசினாலோ அவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
முன்னதாக, பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவுக்கு பிரித்தானியா, ஏற்கெனவே 2001ஆம் ஆண்டு தடை விதித்தது. எனினும், அந்த அமைப்பின் அரசியல் பிரிவுக்கு இன்னும் தடை விதிக்கப்படாமல் உள்ளது.