உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்த சந்தேகநபர் 63 பேரையும் எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் காணொளி மூலமாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்றும் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்த 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் 2 பேருக்கு எதிராக கொழும்பில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டதுடன் 2 பேரின் வழக்கு மேல் நீதிமன்றில் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதையடுத்து 63பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வெவ்வேறு இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 63பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இத்தகைய நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, தற்போது தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக நீதிமன்றிற்கு இவர்களை அழைத்துவர முடியாததையடுத்து அவர்களை காணொளி ஊடாக எதிர்வரும் 9 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.