திருகோணமலை, கிண்ணியா- குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி, சிகிச்சைப் பலனின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் அண்மையில் இடம்பெற்ற மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பால விபத்தில் பல மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சிறுமியின் உயிரிழப்பை தொடர்ந்து குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
குறிஞ்சாக்கேணியில் பழைய பாலத்திற்குப் பதிலாக களப்பு பகுதியில் புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக, பீப்பாய்கள் மற்றும் பலகை என்பனவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள குறித்த மிதப்பு பாலத்தின் இரு பகுதிகளும் கம்பிகளின் ஆதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் உட்பட பிரதேச மக்கள் தமது அன்றாட பயண நடவடிக்கைகளுக்கு குறித்த மிதப்பு பாலத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், குறித்த மிதப்பு பாலத்தின் ஒரு கம்பி அறுந்தமையால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.