ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்தோட்ட தொழிலாளர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தேயிலை மலையில் காணப்பட்ட நான்கு அடி, மூன்று அடி கொண்ட வளர்ந்த புற்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை ஏந்தியும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
தோட்ட நிர்வாகம் தற்போது வேலை நாட்களை குறைத்துள்ளதாகவும் தேயிலை செடிகளை பராமரிப்பதிலிருந்து கைநழுவி விட்டதால் தேயிலை மலைகள் காடாகி காணப்படுவதுடன், தொழிற் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டள்ள நாங்கள், பொருட்களின் விலை அதிகரிப்பால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கம் தங்களது பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை எனவும் மலையக அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்குகளை பெறுவதற்கு வருவதாகவும் இனி வாக்கு கேட்டு வர வேண்டாம் எனவும் தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தங்களுக்கு, உடனடியாக நல்ல தீர்வினை பெற்றுத்தர சம்மந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.