புதிதாக திறக்கப்பட்டுள்ள களனி பாலத்துடன் தொடர்புடைய வீதிகளுக்கு முறையான போக்குவரத்து வீதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் மட்டுமே புதிய களனி பாலத்தை கடக்க அனுமதிக்கப்படும்.
அத்துடன் துறைமுக வீதியை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றமையினால், தற்போது உரிமம் பெற்ற வாகனங்கள் மாத்திரமே அவ்வீதியில் அனுமதிக்கப்படுகின்றன.
இதேவேளை கொழும்பு நோக்கி வருகின்ற ஏனைய வாகனங்கள், துறைமுக நுழைவாயிலுக்குள் பிரவேசிக்காமல், சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் இடது அல்லது வலமாகத் திரும்ப வேண்டும்.
மேலும், புதிய களனி பாலத்தில் பயணிக்க அனுமதிக்கப்படாத கொள்கலன்கள் உட்பட ஏனைய அனைத்து வாகனங்களும், பாலத்திற்கு கீழே உள்ள பேஸ்லைன் வீதியில் பிரவேசித்து, பாலத்திற்கு வெளியே உள்ள பாதையை பயன்படுத்த முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.