யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு குளம் புனரமைப்பு மாதிரி திட்ட வரைபை இன்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் வெளியிட்டு வைத்ததுடன் , அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உட்பட்ட குளங்களை தூர்வாரி , அழகு படுத்தும் செயற்திட்டங்கள் முன்னெடுத்து வரப்படும் நிலையில் , அதன் ஒரு அங்கமாக யாழ் மாநகர சபையின் தூய அழகிய நகர துரித அபிவிருத்தி திட்டத்தின் மற்றொரு செயற்பாடாக நாயன்மார்கட்டு குளம் புனரமைக்கப்படவுள்ளது.
அந்நிலையில் குளத்தின் புனரமைப்பு மாதிரி திட்ட வரைபை முதல்வர் மக்கள் பார்வைக்கு வெளியிட்டு வைத்துள்ளார்.
இதேவேளை , முன்னதாக யாழ் நகர் மத்தி பகுதியில் அமைந்துள்ள ஆரிய குள புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. அதன் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்தது கடந்த 2ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நேற்றைய தினம் புதன்கிழமை ஈச்சமோட்டை மறவன்குளம் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் , இன்றைய தினம் நாயன்மார்கட்டு குள புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த குளங்கள் புனரமைப்பு பணிகளுக்கு தியாகி அறக்கொடை நிறுவனர் நிதி பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.