நாடளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்றமையினால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மன்னாரின் பல பாகங்களிலும் விழிப்புணர்வு வீதி நாடகம் நடத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் குறித்த வீதி நாடகம் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வேண்டுகோளிற்கு அமைவாக மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில், அதன் மாவட்ட இணைப்பாளர் ஏ.திலீபன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த வீதி நாடகத்தின்போது பார்வையாளர்களுக்கு முகக் கவசங்கள் அணிந்து கொள்வதன் முக்கியத்துவம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியம், கை கழுவுவதன் முக்கியத்துவம் மற்றும் கொரோனா தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் பெற்று கொள்வதற்கான அவசியம் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களும் குறித்த வீதி நாடகத்தின் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த வீதி நாடகம் மன்னார் பேருந்து நிலையம், வைத்தியசாலை மற்றும் பொது இடங்களில் இடம்பெற்றது.
பேசாலை மூவிராசாக்கள் பட்டினம் கலைப்பட்டறை கலைஞர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வில், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர், ஊடகவியலாளர்கள் மற்றும் மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.