லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) ரி-20 தொடரின், இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று காலி க்ளேடியேட்டர்ஸ் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தோல்வியை தழுவிய ஜப்னா கிங்ஸ் அணிக்கு இரண்டாவது வாய்ப்பாக, இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதி போட்டியில் தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி, எதிர்வரும் 23ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறும் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், காலி க்ளேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டியில், காலி க்ளேடியேட்டர்ஸ் அணியும் ஜப்னா கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி க்ளேடியேட்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் மெண்டிஸ் 85 ஓட்டங்களையும் தனுஷ்க குணதிலக்க 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், திசர பெரேரா மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணி, 16.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், காலி க்ளேடியேட்டர்ஸ் அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரஹமனுல்லா குர்பாஸ் 59 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
காலி க்ளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், நுவான் துசார 5 விக்கெட்டுகளையும் மொஹமட் ஆமிர், இசுரு உதான, புலின தரங்க மற்றும் அன்வர் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 53 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக 85 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குசல் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.