அதிகாரிகள் குக்கிராமங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடிய வகையில் திட்டங்களை தயாரிக்கவேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் ஊடாக கிராமிய பொருளாதாரத்தின் ஊடாக உணவுப்பாதுகாப்பு என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகளை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நேற்று(செவ்வாய்கிழமை) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
வரவு செலவு திட்டம் ஊடாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 48 கிராம சேவையாளர் பிரிவுகள் ஊடாக வரவு செலவு திட்டம் ஊடாக கிராம மட்ட உற்பத்தி செயற்றிட்டங்கள் ஆரம்பிப்பது குறித்து இங்கு ஆராயப்பட்டது.
மட்டக்களப்பில் குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் மற்றும் விசேட தேவையுடையவர்கள் விசேட கவனம் செலுத்தப்பட்டு இந்த கிராமிய உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன், “நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் கிராமிய பொருளாதாரத்தினை உயர்த்தி பஞ்சம் பட்டினியில்லாமல் போசாக்கான சமூகத்தினை கட்டியெழுப்பவேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது. அந்த அடிப்படையிலேயே இந்த வரவு செலவு திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிட்டார்.