“செழுமையான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கு” எனும் அரசாங்கத்தின் தொனிப்பொருளுக்கமைய பசுமை உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வல்லைவெளி அழகுபடுத்தும் செயற்றிட்டம், இன்று(புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டங்களுக்கான முன்மொழிவுகளை, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்திருந்தார்.
வடமராட்சியின் நுழைவாயில்களில் பிரதானமாகத் திகழும் வல்லைவெளியானது இயற்கை அழகும், இறை நம்பிக்கையும் நிறைந்த பிரதேசமாகும்.
நீண்ட பயணங்களின்போதான காவல்தெய்வ வழிபாட்டிடங்களை கொண்டுள்ள வல்லைவெளியானது, வருடம்முழுவதும் சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் ரசிப்பதற்கும், நீண்ட நடைப்பயிற்சிகளை செய்யவும், இளைப்பாறுவதற்கான சூழலையும் கொண்டமைந்துள்ளது.
யாழின் சுற்றுலா மையங்களில் ஒன்றாக மிளிர்வதற்குரிய இடம்சார், சூழலியல்சார் தகுதிகளை கொண்டுள்ள வல்லைவெளி, பறவைகளை ரசிப்பதற்கும் பொருத்தமான பிரதேசமாகும்.
இத்தகைய இயற்கை அழகை கொண்ட வல்லைவெளி அழகுபடுத்துவதானது வடமராட்சிக்குரிய மற்றுமோர் அபிவிருத்தியாக அமையும் எனும் நோக்கில், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 64 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இச்செயற்றித்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி, வல்லைவெளிப்பகுதியில், வரவேற்பு வளைவு, நடைபாதை, இளைப்பாறும் பகுதிகள், வாகன தரிப்பிடங்கள், இயற்கை ரசனை மையங்கள், சிற்றுண்டி மையங்கள், கழிப்பறை வசதிகள், வல்லைச்சந்தி மேம்படுத்தல் என்பன இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.