இயேசு கிருஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியை கிறிஸ்மஸ் தினமாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடிவருகின்றனர்.
அதன்படி, இலங்கை முழுவதும் நேற்று நள்ளிரவு முதலேயே சிறப்பு பிரார்த்தனைகளுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன.
கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றி, சுகாதார கட்டுப்பாடுகளுடன் மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அத்தோடு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் யேசு பாலகனின் பிறப்பான கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
யாழ். மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ். புனித மரியன்னை ஆலயத்தில் யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்டின் ஞானபிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன்போது ஆலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ள யேசு பாலகனின் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயரினால் ஒளியேற்றப்பட்டு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
இந்த நத்தார் நள்ளிரவு திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு யேசு பாலகனின் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன.
மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது.
குறித்த ஆரானைகளின் போது கொரோனா அச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலியை ஆயர் அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
இதன்போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றியவாறு கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் சிறப்பாக நடைபெற்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளிகளை பேணியவாறு பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
மரியால் பேராலயத்தில் பேராயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன.
இதன்போது யேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன், கரோல் கீதங்களும் பாடப்பட்டன.
மேலும் கொரனா அச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து விரைவில் மீளவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை அன்னதாஸ் அடிகளார் மற்றும் அருட்தந்தையர்கள், ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.