மட்டக்களப்பிலிருந்து பனம் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் வகையில் உருவாக்கப்பட்ட சௌபாக்கியா உற்பத்தி கிராமத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உற்பத்தி கிராமத்தில் உற்பத்திசெய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சி இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்து கிராமங்கள் சௌபாக்கிய உற்பத்தி கிராமங்கள் திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டு அங்கு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு பயிற்சி மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
பனிச்சையடி,கொக்குவில்,சத்துருக்கொண்டான்,சின்ன ஊறணி,திராய்மடு ஆகிய ஐந்து கிராமங்கள் இந்த திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு இங்கு அதற்காக 09மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன் 127பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான பனை உற்பத்தி தொடர்பான பயிற்சியும் தொழில் முன்னெடுப்புக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளின் உற்பத்தி கண்காட்சி நேற்று (புதன்கிழமை) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் ஆரம்பமான இந்த கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ல.பிரசந்தன்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.சுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பனை உற்பத்தி பொருட்கள் காண்காட்சி திறந்துவைக்கப்பட்டதுடன் விற்பனையும் முன்னெடுக்கப்பட்டது.
இவர்களினால் உற்பத்திசெய்யப்பட்ட பனை உற்பத்தி பொருட்களை பனை அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கும் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதிசெய்வதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தெரிவித்தார்.