இந்தியாவுக்கு அனுப்பவுள்ள கூட்டு ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பத்தன் தெரிவித்தார்.
அந்த ஆவணம் தொடர்பான செயற்பாடுகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதனால் அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போது இந்த விடயத்தில் அதிக கரிசனை செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு தமிழ்ப் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமைப்பட்ட நிலைப்பாட்டை எடுக்கவும், ஒன்றுபட்டு செயற்படவும் தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.