எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற பேரணியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த இதனை தெரிவித்தார்.
மற்ற அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை இல்லாதுபோயுள்ள நிலையில் அனைவரும் கூட்டணிக்காக தேசிய மக்கள் சக்தியை நாடுவதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே அதே அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் மக்கள் இங்கிருந்தும் விலகிச் செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என சுட்டிக்காட்டினார்.
எனவே தேசிய மக்கள் கட்சி எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்காது என குறிப்பிட்ட கே.டி லால்காந்த, முற்போக்கான உறுப்பினர்கள் கட்சியில் இணையலாம் என கூறினார்.
தற்போதைய அரசாங்கம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் ஊழலுக்கும் மோசடிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அரசாங்கம் நாட்டுக்கு தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளதாகவும் கே.டி லால்காந்த தெரிவித்தார்.