வடக்கு வடமத்திய, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும், மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ அவ்வப்போது பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பரவலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்ற இந்நிலையில் தற்கால வானிலை நிலவரம் தொடர்பில் (திங்கட்கிழமை) தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்.
மேல், சப்ரகமூவா, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது.
வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான, ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தேட்டை மாவட்டத்திலும், அவ்வப்போது மணித்தியாத்திற்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுமென, எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமூவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மழையுடனான காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நாட்டைச் மூழவுள்ள கடற் பிராந்தியங்களில் காற்று வடகிழக்குத் திசையிலிருந்து, வீசக்கூடுவதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 25தொடக்கம் 35கிலோ மீற்றர் வேகம் வரை அதிகரிக்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
மன்னாரிலிருந்து பத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையிலான கரையோரத்திற்கு, அப்பாற்பட்ட கடற்பரப்புக்களிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொதுவில் வரையான கரையோரத்திற்கு, அப்பாற்பட்ட கடற் பரப்புக்களும், காற்றின் வேகமானது அவ்வப்போது, மணித்தியாலத்திற்கு 50கிலோ மீற்றர் வரை, அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கூறப்பட்ட கடற் பிரதேசங்களில், கடல் ஓரளவு கொந்தழிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற் பரப்புக்கள். அவ்வப்போது மிதமான அலையுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெயும் நேரங்களில், கடற் பகுதியில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன், அக்கடற் பிரதேசங்கள் கொந்தழிப்பாகவும் காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.