தற்போது ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பகரமான செயற்பாடுகள் ஒரு வகையில் எங்களை பலமுள்ளதாக மாற்றும்.அதற்கேற்றாற்போல் தமிழ் தலைமைகள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தியாவினை தமிழர்களுக்கு விரோதமானதாக மட்டும் பார்க்காமல் தமிழர்களின் நலன்சார்ந்த விடயங்களில் இந்தியா செயற்பாடேயாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு சுயாட்சி. இதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் தற்காலிகமாக நாடாளுமன்றத்தில் சட்டவாக்கம் செய்யப்பட்டு அரசியல் யாப்பின் ஊடாக இணைக்கப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் பலவீனமடைந்துள்ள இக்காலப்பகுதியில் தற்காலிகமாவது ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை இலங்கை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கவேண்டும் என்ற பகிரங்க கோரிக்கையினை அவர்களிடம் முன்வைக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் புதுவருடத்தினுள் மூன்று இன மக்களுக்குமான ஒரு ஜனாதிபதி மீண்டும் மீண்டும் பௌத்த ஆதிக்கத்துடன் சிங்கள மக்களுக்கு தமது சேவையைச் செய்ய வேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருந்தாலும், கடந்த காலத்தில் ஜனாதிபதியின் உரையாடல் என்பது வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் அவர் உரையை விடுப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நாட்டின் ஜனாதிபதி வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கட்சியுடன் பொது இணக்கப்பாட்டிற்குச் சென்று பொதுவாக வேலை செய்கின்ற காலகட்டத்தில் அப்படிப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அவருடன் சேர்ந்திருக்கும் காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் தொடர்பாக ஒரு அன்னியோன்னியமான ஒரு நல்ல விடயங்களைப் பேசாமல் குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள நாடாளுமன்ற பிரதிநிதிகள் மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
இந்த மீளாய்வு செய்யப்படாவிடின் ஜனாதிபதியுடன் பேசி இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட விடயங்கள் பரிசீலணைகுட்படுத்த வேண்டும். இன்றைய சூழ்நிலையில் நாங்கள் பலவீனமடைந்து செல்கின்றோம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு உள்ளதைப் பலமாக மாற்ற வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கில் மாகாண சபை முறைமை அமுல்ப்படுத்தப்பட்டன. நாங்கள் தமிழ் தலைமைகள் நிரந்தரத் தீர்வு சுயாட்சியாக இருந்தாலும் தற்காலிகமாக நடைமுறைப்படுத்துவதற்கு 13 ஆம் திருத்தச் சட்டம் தான் கையில் உள்ளது. அதை நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவிடம் கூறுவது தவறான விடயம் இல்லை.
குறிப்பாகத் தமிழ் தலைமைகள் கூடிப் பேசும் விடயத்தில் தமிழரசுக் கட்சி இன்னும் சரியான தீர்மானம் எடுக்கவில்லை என நான் அறிந்திருந்தேன். எனினும் நான் தமிழரசுக் கட்சிக்கு ஒரு அழைப்பு விடுக்க விரும்புகின்றேன்.
நீங்கள் சுயாட்சியைக் கேட்டுக் கடந்த காலத்திலும் முன்வைத்து இருந்தாலும்கூட பல விடயங்களைத் தற்சமயம் மீளாய்வு செய்யப்படும் போதும் தற்காலிகமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூடியவாறு ஒரு செயல் வடிவத்தைக் கொடுப்பது என்பது நாம் ஒட்டுமொத்தமாகத் தமிழருக்கான தீர்வை அளிப்பதற்கான சமம் என்று நினைத்துவிடக்கூடாது.
தற்சமயம் கையில் உள்ளது அமுல்படுத்துவதற்கு அனைத்து தலைமையகமாகச் சேர்ந்து ஒரே முடிவை எடுத்து நாம் இந்தியாவுடன் பேசுவதில் என்ன தவறு உள்ளது என்பதை நான் கேட்க விரும்புகின்றேன்.
அதை எதிர்காலத்தில் வருகின்ற நாட்களில் இந்த தமிழரசுக்கட்சி நல்ல முடிவுகளை எடுத்து நாங்கள் தற்காலிகமாக எனினும் இந்த விடயத்தை நடைமுறைப்படுத்த உடன் கூடிய இணக்கப்பாட்டுடன் தமிழ் தலைமைகளுடன் கூட்டுச்சேர்ந்து நாங்கள் அனைவருமாகச் சேர்ந்து இந்தியாவுடன் இந்த விடயத்தை முன்வைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் இந்தியாவும் இதை நடைமுறைப்படுத்த சாதகமாக அமையும். இந்தியா என்பது தமிழர்களுக்கு விரோதமான என்ற விடயம் என்றும் நாம் பார்த்து விடக்கூடாது.
இந்தியா முதலாவது அதன் நலன்கள் தொடர்பாகவே செயற்பட்டு . தமிழ் நாட்டையும் எங்களையும் பொறுத்தவரையில் கலாச்சார ரீதியான தொப்புள் கொடி உறவு என்பார்கள். அந்த உறவு இன்றும் எங்களுக்கு இருக்கின்றன.
ஆகவே இதை நாம் நினைவில் நிறுத்திக்கொண்டு தமிழர்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில் தமிழர்களுக்கு நிரந்தரமாகத் தீர்வு சுயாட்சி இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை நாடாளுமன்ற சட்டவாக்கம் செய்யப்பட்ட அரசியல் யாப்பில் எடுத்துக்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நாங்கள் தற்சமயம் பலவீனம் அடைந்துள்ள காலத்தில் தற்காலிகமாக வேண்டும் அதை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த கூடிய செயல் வடிவத்தைத் தமிழரசுக் கட்சி வழங்க வேண்டும் என்பதை நான் பகிரங்க வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.