பாடசாலை ஆரம்பிக்கும், முடிவுறும் நேரங்களில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என கிளிநொச்சி மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குறித்த பாடசாலையானது வடக்கு மாகாணத்தில் அதிக மாணவர் தொகை கொண்ட பாடசாலையாக உள்ளது. 2500 மாணவர்கள் வரை கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் தரம் 1 முதல் உயர்தரம் வரையான மாணவர்கள் கல்வி கற்பதுடன், நீீீீண்ட வரலாறு கொண்ட பாடசாலையாவும், சாதனைகள் பல புரிந்த பாடசாலையாகவும் இன்றும் திகழ்கின்றது.
குறித்த பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவுறும் நேரங்களில் பாரிய நெருக்கமான நிலை காணப்படுகின்றது. ஏ9 வீதிதியிருந்து 25 மீட்டர் உட்பகுதியில் காணப்படும் குறித்த பாடசாலை, வட்டக்கச்சி செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ளது.
குறித்த வீதி தற்பொழுது புனரமைப்பு செய்யப்பட்டுள்ள போதிலும், அதன் அகலம் சுமார் 3 மீட்டர் மாத்திரமே உள்ளது. இதேவேளை சில அரச திணைக்களங்களும் குறித்த வீதியில் அமைந்தும் உள்ளது.
இவ்வாறான நிலையில் பாரிய நெரிசல் குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள நிலையில், குறித்த நெரிசலை கட்டுப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பெற்றோரும், பாடசாலை சமூகமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த வீதியை குறிப்பிட்ட நேரங்களில் ஒருவழி பாதையாக்குதல், அக்காலப்பகுதியில் கனரக வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தல், வீதியை மேலும் விஸ்தரித்தல், மாணவர் நடைபாதையினை அமைத்தல், வாகனங்களை பாதையிலிருந்து விலகி உரிய முறையில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தல் போன்றவற்றால் குறித்த நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.
பல்வேறு துறைசார்ந்தவர்களின் பிள்ளைகளும் குறித்த பாடசாலையில் கல்வி கற்று வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என கல்வியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை சமூகம் வினயமான கோரிக்கையை முன்வைத்துள்ளது.