அரசாங்கம் எதிர்வரும் மூன்று வருடங்களை நாட்டின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் வகையில் முன்னோக்கி கொண்டு செல்லும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கிழக்கு கொள்கலன் முனையத்தின் நிர்மாணப் பணிகளை இன்று காலை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும்போது, எதிர்கட்சியினர் திட்டங்களை மாற்றியமைக்க முயற்சித்ததுடன், கப்பல்களை நிறுத்த முடியாது எனக் கூறி விமர்சனங்களை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது அரசாங்கம் பொறுமை காத்து, முன்னெடுத்துச் சென்று துறைமுகத்தை நிறைவு செய்ததாகவும் குறிப்பிட்டார்.
அப்போதைய அரசாங்கம் நான்கு வருட காலப்பகுதியில் மோதலை முடிவுக்குக்கொண்டு வந்ததென்றும் அதேநேரத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளை ஆரம்பித்தது என்றும் பிரதமர் கூறினார்.
எவ்வாறாயினும் முன்னாள் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் துறைமுகத்தை விற்பனை செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இக்கட்டான தருணத்தில் கிழக்கு முனையம் போன்ற கடினமான பணியை ஏன் ஆரம்பிக்கிறார்கள் என்று பலர் கேள்வி எழுப்பியதாகவும் பல அரசாங்கங்கள் சிரமங்களுக்கு மத்தியில் பின்வாங்கிவிட்டதாகவும் சவால்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கங்கள் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்கள் வீணாகி விட்டதாகவும் அடுத்த மூன்று வருடங்களை அரசாங்கம் தீர்க்கமான ஆண்டாகவே பார்க்குமெனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் குடிமக்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.