அடுத்த வாரம் கடற்படை பயிற்சிக்கு ரஷ்யா தயாராகி வரும் நிலையில், கடலுக்கு செல்லும் தனது அணுகலை ரஷ்யா தடுத்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், ‘அசோவ் கடல் முற்றிலும் தடுக்கப்பட்டது மற்றும் கருங்கடல் கிட்டத்தட்ட முழுமையாக ரஷ்ய படைகளால் துண்டிக்கப்பட்டது’ என கூறினார்.
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பல தசாப்தங்களில் ஐரோப்பா மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டதாக பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார்.
உக்ரைனின் தெற்கே உள்ள கருங்கடல் மற்றும் அசோவ் கடல் ஆகிய இரு கடல்களில் ரஷ்யாவின் கடற்படைப் பயிற்சி அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. ஏவுகணை மற்றும் துப்பாக்கி சூடு பயிற்சிகளை மேற்கோள் காட்டி ரஷ்யா கடலோர எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இதற்கிடையில், உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம், ‘இராணுவப் பயிற்சிகள் என்ற போலிக்காரணத்தின் கீழ், ரஷ்யா உக்ரைனின் கடல்சார் இறையாண்மையை கட்டுப்படுத்துகிறது. கருங்கடல் அசோவ் கடலில் வழிசெலுத்துவதற்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் உக்ரைனின் பொருளாதாரத்திற்கு அத்தியாவசியமான கடல் போக்குவரத்தை தடுக்கிறது’ என்று ட்வீட் செய்துள்ளது.
அத்துடன், ‘ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் அதிகரித்த அச்சுறுத்தல்கள்’ காரணமாக உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியது.
எல்லையில் 100,000 துருப்புக்கள் குவிக்கப்பட்ட போதிலும் உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்தவொரு திட்டத்மும் இல்லையென ரஷ்யா மறுத்துள்ளது.
ஆனால், அது அண்டை நாடான பெலாரஸுடன் பாரிய இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது. பெலாரஸ் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடு மற்றும் உக்ரைனுடன் நீண்ட எல்லையைக் கொண்டுள்ளது.