ரஷ்யா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து, அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வேண்டுகோள் விடுத்ததையடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதனை, உறுதிப்படுத்தியுள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை செயலாளர் ஜென்சாகி, அமெரிக்கா, ரஷ்யா ஜனாதிபதிகள் சந்திக்கும் உச்சி மாநாடு குறித்தும், அதில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த அறிக்கைகைளை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் பெப்ரவரி 24ஆம் திகதி நடைபெறும் சந்திப்பின் போது முடிவெடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்காது என்ற நிபந்தனையுடன் மட்டுமே இந்த மாநாட்டை நடத்த முடியும் என வெள்ளை மாளிகை மேலும் தெரிவித்துள்ளது.
நேட்டோவுடன் இணையக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்திவரும் ரஷ்யா, உக்ரைனிலும் அதற்கு அருகிலும் ரஷ்ய படைவீரர்கள் சுமார் 169,000-190,000பேரைக் குவிந்துள்ளது.
ஆனால், உக்ரைன் மீது படையெடுக்கும் எந்த திட்டமும் இல்லையென ரஷ்யா கூறியுள்ளது. எனினும், ரஷ்யா, உக்ரைன் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதனிடையே கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால், மொத்தம் 1,500 போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடந்ததாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் டொனெட்ஸ்கில் பகுதியில் 591 மீறல்களும், லுகான்ஸ்கில் 975 மீறல்களும் பதிவாகி உள்ளன. இது கடந்த எட்டு ஆண்டுகாலமாக தொடரும் இரு நாடுகளுக்கு இடையேயான மோதலில் அதிகபட்சமாக கருதப்படுகிறது.