நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக வரிச் சட்டமூலத்தை சவால் செய்து உயர் நீதிமன்றில் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐக்கிய மக்கள் சக்தி, விசேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
அவைத்த தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் நேற்று மேலதிக வரிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடக்கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இன்று (புதன்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2000 மில்லியன் ரூபாய்க்கு அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு 25 சதவீத மேலதிக வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்தது.
அதன்படி ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25 சதவீத மேலதிக வரி தொடர்பான குறித்த சட்டமூலத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இதனை அடுத்து EPF மற்றும் ETF ஆகியவையும் மேலதிக வரிக்கு உட்படுத்தப்படும் என நிபுணர்கள், எதிர்க்கட்சியினர் உள்ளிட்டவர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.
எனவே 2022 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 25% மேலதிக வரியிலிருந்து EPF, ETF உள்ளிட்ட 9 பிற நிதியங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார்.