மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உள்ள வெல்லாவெளி பிரதான வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்ததின் பின்னர் தற்காலிகமாக புனரமைக்கப்பட்ட வெல்லாவெளி – பக்கியல்ல பிரதான வீதியானது நீண்ட காலமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதனால் தினமும் குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் அதிகளவில் வாழும் குறித்த பகுதி ஊடாக விதைப்பு காலத்திலும், அறுவடை காலத்திலும் விவசாயிகள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியின் ஊடாக பஸ் மற்றும் ஏனைய போக்குவரத்துகள் மிகவும் கஸ்டமான நிலையிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும், கர்ப்பிணிப்பெண்களை ஏற்றிச்செல்லும் போது பெரும் கஸ்டங்களை அவர்கள் எதிர்கொள்வதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியூடாக பாரிய கண்டர் வாகனங்களில் மண் ஏற்றிச்செல்வதனால் மேலும் வீதிகள் பாதிக்கப்படுவதாகவும், இதனை நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வினை தடுத்து நிறுத்தபோராட்டம் நடாத்த வேண்டிய நிலையேற்படும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியான குன்றும்குழியுமாக காணப்படுவதன் காரணமாக மழை காலங்களில் பயணங்களை மேற்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியை புனரமைத்து வழங்குவதற்கு உரிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடசாலை செல்லும் போது மாணவர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் வீதி மோசமான நிலையிருப்பதனால் முறையான போக்குவரத்துகள் இல்லாத நிலையே உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.