தலைவலிக்காக தலையணை மாற்றிய கதையாகவே அமைச்சர்களின் மாற்றம் இருக்கின்றது. இதன்மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா ? இதனையும் அரசாங்கம் அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றது. என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இன்று (வெள்ளிக்கிழமை)ஹட்டனில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”தலைவலிக்காக தலையணை மாற்றிய கதையாகவே அமைச்சர்களின் மாற்றம் இருக்கின்றது. இதன்மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா ? இதனையும் அரசாங்கம் அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றது.
உண்மையை பேசிய சுசில் பிரேமஜயந்த வெளியேற்றப்பட்டார். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் அரசாங்கம் உண்மையை பேசுபவர்களை பழி வாங்குகின்றதா அல்லது உண்மையை பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு ஏனைய அமைச்சர்களை அச்சுறுத்துகிறதா.
இந்த அரசாங்கம் எந்தவொரு விடயத்திலும் முகாமைத்துவம் இல்லாமல் இருக்கின்றது. நோக்கம் இல்லாமல் இருக்கின்றது. எதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் இருக்கின்றது.
எதிர்கட்சியாகிய நாங்கள் அன்றே கூறினோம். மக்களுக்கு உண்ண உணவில்லை. காபட் பாதையை போடுவதால் அதனை உண்ண முடியுமா என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அன்று நாடாளுமன்ற எதிர்கட்சிகளை ஏலனம் செய்தார்கள். ஆனால் இன்று முன்னாள் அமைச்சர் வீரவன்ச அதை கேள்வியை கேட்கின்றார். இது தான் இன்றைய நிலைமை.
இலங்கைக்கு தற்பொழுது ஓரளவேனும் அந்நிய செலவாணியை கொண்டு வருவது பெருந்தோட்டத்துறையின் தைக்கப்பட்ட ஆடைகளுமே. ஆனால் இன்று அந்த துறைகளும் பாரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
டீசல் இல்லாத காரணத்தினால் பெருந்தோட்டத்துறை தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை, மின்சார துண்டிப்பால் ஆடை தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி டீசல் இல்லாத காரணத்தினால் முழு இலங்கையுமே பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசாங்கம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும் என்ற திட்டமிடல் இல்லாமல் இருக்கின்றது.
ஜனாதிபதியின் வெற்றியை பாற்சோறு சமைத்து கொண்டாடியவர்கள் இன்று பெற்றோல் பவுஸர் வருவதையும் கேஸ் வருவதையும் பார்த்து பாற்சோறு பொங்குகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த மிகவும் மோசமான நிலைக்கு காரணம் டொலர் இன்மையே. டீசல் இன்மையால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தங்களுடைய பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களில் இருக்கின்றவர்களுக்கு மரக்கறிகள் பெற்றுக் கொள்வதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடருமாக இருந்தால் நாட்டில் பஞ்சம் எற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.
ஏற்கனவே அரசாங்கம் ஜெனிவாவில் யுத்த குற்றச்சாட்டுகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் முகங்கொடுத்து வந்த நிலையில் இன்று புதிதாக அதி வணக்கத்திற்குரிய மெல்கம் கார்தினல் ரஞ்சித் அவர்களுடைய முறைபாடு, ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஹரின் பெர்ணாண்டோ, மனுச நாணயக்கார ஆகியோரின் முறைபாடு என பல புதிய பிரச்சினைகளை அரசாங்கம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது” என்றார்.