வவுனியா புளியங்குளம் பழையவாடியில் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மல்லிகை மாதிரி செய்கைக்கு பிரதேச செயலகத்தினால் ஒதுக்கப்பட்டு அளவீட்டுப்பணிகள் இடம்பெற்றபோது அங்கு வருகை தந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு தனது மல்லிகை செய்கை காணிக்கு தடை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அங்குள்ளவர்களை வைத்து முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதியொருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எமது சமூகத்திற்கு எதிராக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை உடன் நிறுத்திக்கொள்ளுமாறும் வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது மல்லிகை செய்கையாளரான தம்பாப்பிள்ளை பிறேமேந்திரராஜா தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “புளியங்குளம் பழையவாடிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு இடம்பெற்ற காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்ததும் நடவடிக்கையை மேற்கொண்டார்.
அங்கு வந்த செல்வராசா கஜேந்திரன், காண்டீபன் ஆகியோர் பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எனது செய்கைக்கு தடை ஏற்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
மக்களின் பங்களிப்புடன் லக்சபான மின்சாரம் செல்லும் நிலத்திற்கு அடியில் மின்சார சபையினரின் அனுமதியுடன் அரச நில அளவை திணைக்களத்தினால் அளவீட்டுப்பணிகள் இடம்பெற்று கொண்டிருந்தபோது அங்கு வந்து எனது இந்நடவடிக்கைக்குத் தடை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
அங்கு இருக்கும் மக்கள் எவ்விதமான எதிர்ப்புக்களையும் எனக்கு தெரிவிக்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி உறுப்பினர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை அங்கு கூடி நின்று எனது திட்டத்திற்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த செயற்பாடுகளை கஜேந்திரன் எம்.பி, உடன் நிறுத்தி கொள்ள வேண்டும்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.