நாடு எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழியைக் கண்டறிவது குறித்து நாளை சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம் நடத்தவுள்ளது.
இலங்கைக்கான உதவித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று நாளை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது
இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி நெருக்கடியை நிவர்த்தி செய்வதுடன், நாட்டின் கடனை மறுசீரமைப்பது குறித்த உதவியை பெறுவது குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டாம் கட்ட விவாதம் அடுத்த மாதம் வொஷிங்டன் டிசியில் நடைபெறவுள்ள நிலையில் இக்கலந்துரையாடலுக்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவும் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளனர்.
இருப்பினும் இந்த பேச்சுவார்த்தைகள் கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்கானது அல்ல என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.