மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம் சுமையை மட்டுமே வழங்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
‘முழு நாடும் அழிவில், நாட்டைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி அலுவலகத்திற்கு எதிரே இடம்பெற்ற போராட்டத்தின்போதே அவர் இதனை கூறினார்.
வீட்டிற்குச் செல்லுங்கள் அல்லது மக்கள் தீர்மானம் ஒன்றினை எடுப்பதற்காக ஜனாதிபதித் தேர்தலை நடத்துங்கள் என அவர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு ராஜபக்ஷ அரசாங்கமும், ராஜபக்ஷ குடும்பமும் பொறுப்பு என்றும், அவர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கான நேரம் இது என்றும் கூறினார்.
மேலும் அழிவின் விளிம்பில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு தயாராக வேண்டிய நேரம் இது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்தோடு தாம் ஆட்சிக்கு வந்தால் முன்பணம் எதுவுமின்றி இரு வருடங்களுக்கு எரிபொருளை வழங்குவதாக மூன்று மத்திய கிழக்கு நாடுகள் உறுதியளித்துள்ளன என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.