ஒரு லட்சம் ரூபாயையும், சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று ( புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நீதி அமைச்சரின் நடமாடும் சேவையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் என நாங்கள் கூறியிருந்தோம். இழப்பீடோ, மரணச்சான்றிதழோ தேவையில்லை என கூறியிருந்தோம். அப்படியிருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீது திடீரென ஏன் அக்கறை வருகின்றது.
ஒருலட்சம் ரூபா நிதியினை எமது உறவுகளுக்கு வழங்கி அந்த நிதியில் வாழ்க்கை செலவை கட்டியெழுப்ப முடியுமா? இந்த நிதியில் எமது உறவுகள் வாழ முடியுமா? நீதிக்காக இதுவரை காலமும் போராடி கொண்டிருந்தோமே தவிர ஒரு லட்சம் ரூபாவிற்காக போராடவில்லை.
யுத்தம் முடவடைந்து 13 வருடங்களை கடந்தும் எமது உறவுகளை தான் தேடிக்கொண்டிருக்கின்றோம். உறவுகளுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கி உறவுகளை திருப்திப்படுத்துவதாக நீதி அமைச்சர் கூறியிருக்கின்றார்.
எமது உறவுகள் நிதிக்காக போராடவில்லை. சர்வதேசமானது நீதி அமைச்சர் அலிசப்ரி கூறுகின்ற கூற்றையும், பதிவாளர் நாயகம் எடுத்திருக்கின்ற இந்த முடிவும் தவறானது. ஏனென்றால் நாங்கள் 13 வருடமாக தொடர்ச்சியாக வீதியோரத்தில் நின்று நிதிக்காகவோ, காணாமல் போனவர்களுக்கான சான்றிதழிற்காகவோ போராடவில்லை. எமக்கு நீதி தான் தேவையென்றே போராடி வருகின்றோம்.
சர்வதேசமானது இதனை கண்டித்து 49 ஆவது கூட்ட தொடரிலாவது எமக்கு நீதி வழங்க ஆவன செய்வார்கள் என்ற நம்பிக்கையிலே காத்திருக்கின்றோம். ஒரு லட்சம் ரூபாயையும், காணாமல் போனவர்களுக்கான சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார். இவரின் கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இலங்கை அரசின் நீதி மறுக்கப்பட்ட போதுதான் சர்வதேசத்தை நோக்கி போராடி வருகின்றோம். இலங்கை அரசின் உள்ளக பொறிமுறையோ, காணாமல் போனோரின் அலுவலகமோ எமக்கு தேவையில்லை என்பதனை தான் கூறிக்கொண்டிருக்கின்றோம்.
இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி பொறுப்பு கூற வேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களும் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும், இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டவர்களும் , இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களையும் தான் நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம்.
ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியா எமது உறவுகளின் பெறுமதி? இதனை எமது உறவுகள் யாரும் வாங்க கூடாது என்பதனை ஊடக வாயிலாக தெரிவித்து கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.