மக்கள் தற்போது அனுபவித்துவரும் துன்பங்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நிதியமைச்சரின் தவறு காரணமாகவே எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துகளை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்கின்றனர் என கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பொருட்களை இறக்குமதி செய்ய 20.6 பில்லியன் டொலர்களை அரசாங்கம் செலவிட்ட போதும் மருந்து, மருத்துவ உபகரணங்கள், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றை இறக்குமதி செய்ய 4.6 பில்லியன் டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்காக கிட்டத்தட்ட 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டதாக உதய கம்மன்பில கூறியுள்ளார்.
இதேவேளை புற்று நோய் அல்லது இருதய நோய்க்கான மருந்து தட்டுப்பாடு காரணமாக ஒருவர் உயிரிழந்தால், அவர்களின் மரணத்திற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.