சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதன் காரணமாகவே பெற்றோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் 2022-23 வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த சில வாரங்களாகவே சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. எண்ணெய் விநியோகத்திலும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கச்சா எண்ணெய் விலை உயா்வை எதிா்கொள்ள மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதேவேளை உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயா்வு, விநியோகத்தில் இடையூறு என புதிய சவால்கள் ஏற்பட்டாலும், பணவீக்கம் கட்டுப்பாட்டில்தான் உள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.