ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்து தனித்து இல்லாமல் கூட்டமைப்பாக ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அவ்வாறு எடுக்கப்படும் முடிவு பலமாக அமையும் என்றும் கூறினார்.
எந்தவிதமான பிரேரணை கொண்டுவந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மூன்று கட்சிகளும் கலந்துரையாடி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என சித்தார்த்தன் தெரிவித்தார்.
மூன்று கட்சியும் இணைந்து தீர்மானம் எடுக்க முடியாவிட்டால் தனியாக தீர்மானம் எடுக்க மத்திய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் யுத்தத்திற்காக செலவழிக்கப்பட்ட பெருந்தொகையான பணங்களும் அதற்காக பட்ட கடன்களும் அதனால் ஏற்பட்ட அழிவுகளுமே பொருளாதார பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது என குறிப்பிட்டார்.
இதேவேளை பொதுமக்கள் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி போராட்டம் நடத்தினாலும் அவர் பதவி விலகமாட்டார் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்றும் சித்தார்த்தன் தெரிவித்தார்.