நாட்டில் போராட்டங்களை நடத்தும் இளைஞர்களில் பெரும்பாலானோர் நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞர்கள் நாட்டுக்காக முன்வந்துள்ளமை சுபமான குறியீடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யவும் போராட்டங்களை நடத்தவும் இன்று முழு சுதந்திரம் பெற்றுள்ளனர்.
அவர்கள் தமது போராட்டங்களை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்லும் போது, ஒழுக்கத்துடன் கடமையாற்றும் பொலிஸார், முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளை குறிப்பாக நான் பாராட்டுகின்றேன்.
உங்களுக்குத் தெரியும். கடந்த இரண்டரை ஆண்டுகளில், நான் போராட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு, ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளித்து இருந்தேன். சுதந்திரம் வழங்கியுள்ளேன். என் அலுவலகத்திற்கு அருகில் வந்த போராட்டக்காரர்களை கலைக்கக்கூட நான் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த எதிர்ப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் நாட்டை உண்மையாக நேசிக்கும் இளைஞர்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் நாட்டுக்காக முன்வருவதை எதிர்காலத்திற்கான சாதகமான அடையாளமாகவும் பார்க்கிறேன்.
இனம், மதம், அரசியல் வேறுபாடின்றி நாட்டை நேசிக்கும் பெரும்பாலான மக்கள் தற்போதைய ஆட்சியின் தவறுகளை திருத்தி நாட்டைக் கட்டியெழுப்பவே விரும்புகின்றார்கள். நாட்டைத் தோல்வி அடையச் செய்வதற்கு அல்ல என்று நான் நம்புகிறேன்.
எனவே, உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை வன்முறைப் பாதையில் திசை திருப்ப சந்தர்ப்பவாதிகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று இந்த இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.