பொதுத்துறை தொழிற்சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இன்று (புதன்கிழமை) நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளன.
இதற்கு “தேசிய கறுப்பு எதிர்ப்பு தினம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
300க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த ஹர்த்தாலில் பங்கேற்கின்றன என சுகாதார வல்லுநர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகுமாறு கோரியே இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நெருக்கடிக்கு தற்போதைய ஆளும் கட்சியே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இது இயற்கை அனர்த்தம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே அரசாங்கம் இந்தச் செய்தியைக் கவனத்திற்கொண்டு இந்த நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்கள் எழுச்சியை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்க இயக்கமும் வெகுஜன இயக்கமும் இணைந்து இன்று கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, எதிர்வரும் 28ஆம் திகதி நாடளாவிய ரீதியிலான வேலைநிறுத்தமாக இதனை வளர்த்தெடுப்போம் என்றும் அதற்கு நாடளாவிய ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.