பிராந்தியங்களுக்கான அதிகாரங்களை வழங்குவதன்மூலம் மட்டுமே இந்த நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
ரம்புக்கண துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு நினைவுதினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.அதற்கான நீதி விசாரணைகூட முன்னெடுக்கப்படவில்லை.இது தொடர்பில் கிறிஸ்தவ சமூகமும் ஆத்திரமடைந்த நிலையில் பாப்பரசரிடம் முறையிட்டுள்ளனர்.
இதுபோன்ற பல படுகொலைகளுக்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து எந்தவித நீதியும் கிடைக்கவில்லை.குறிப்பாதக தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் எந்த அரசாங்கம் எந்த மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து தெரிவுசெய்தார்களோ அந்த மக்களே இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு செல்லுமாறு கோசம் எழுப்புகின்றனர்.ஆனால் இந்த அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளாமல் புதிய அமைச்சரவையினை நியமித்துள்ளது.
மக்கள் அரசாங்கத்தினை வெளியே செல்லுமாறு ஆர்ப்பாட்டம் செய்யும் இந்த நிலையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையின் டொலர் பெறுமதி மிகவும் அதிகரித்த நிலையிலுள்ளது.இதன்காரணமாக மக்களின் வாழ்க்கை செலவும் அதிகரித்துவருகின்றது.பொருட்களுக்காக வீதியில் நிக்கவேண்டியநிலையேற்பட்டுள்ளது.பெரும்பாலான நேரங்கள் பொருட்களை வரிசையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு செலவிடப்படுகின்றது.
இந்த நிலையில் தோல்வியை தழுவிக்கொண்ட அரசாங்கம் வீட்டுக்கு செல்லாமல் மக்களை மேலும் துன்பப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்துவருகின்றது.
அண்மையில் துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதுபோன்ற பல சம்பவங்களை நாங்கள் எதிர்பார்க்கலாம்.காலிமுகத்திடலில் பாரியளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
மக்கள் எழுச்சிகளை மதித்து இந்த அரசாங்கத்தினை கலைத்துவிட்டு தேர்தலுக்கு செல்லவேண்டும்.தேர்தலுக்கு செல்லமுன்னர் அரசியலமைப்பு மாற்றம் ஒன்றை செய்யவேண்டிய அவசியம் உள்ளது.வெறுமனே கதிரைகளை மாற்றுவதன் மூலம் மட்டும் இந்த நாட்டின் நிலையினை சீர்படுத்தமுடியாது.பிராந்தியங்களுக்கான அதிகாரங்களை வழங்குவதன்மூலம் மட்டுமே இந்த நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்.அவ்வாறான நிலையேற்படும்போது பிராந்தியங்கள் முன்னேற்றமடையும்போது ஒட்டுமொத்த இலங்கையினதும் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
விவசாய கொள்கை தோல்வியடைந்துள்ளது என்று ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
அரசாங்கத்தின் அனைத்து கொள்கைகளும் தோல்வியடைந்துவிட்டது.இலங்கையின் அனைத்து பகுதிகளும் பொதுமக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு மதிப்பளித்து இந்த அரசாங்கம் வீடுசெல்லவேண்டும். என தெரிவித்தார்.