பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டத்தை ஸ்கொட்லாந்து இன்று (திங்கட்கிழமை) தொடங்கியுள்ளது.
இந்த கோடையின் பிற்பகுதியில் பயணிகள் ஏறுவதற்குத் தயாராகும் வகையில், ‘ஸ்டேஜ்கோச்’ தனது சோதனை ஓட்டத்தை இன்று முதல் மேற்கொள்ளும்.
ஸ்கொட்லாந்தில் உள்ள நிறுவனத்தின் பிராந்திய இயக்குனர் சாம் கிரீட், இது ஒரு மிகவும் உற்சாகமான திட்டம் என்று விபரித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்து சேவையை முழுமையாக தொடங்குவதற்கான எங்கள் பயணத்தில் இது ஒரு முக்கிய படியாகும், மேலும், இது ஸ்கொட்லாந்தின் மையத்தில் புத்தம் புதிய பேருந்து வழித்தடத்தை எளிதாக அணுகும்’ என கூறினார்.
CAVForth பைலட் திட்டத்தில், ஐந்து ஒற்றை அடுக்கு தானியங்கி பேருந்துகள் ஸ்கொட்லாந்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும். இதில் ஃபெரிடோல் பார்க் மற்றும் ரைட் இன் ஃபைஃப் மற்றும் எடின்பர்க் பார்க் ரயில் மற்றும் டிராம் இன்டர்சேஞ்ச் இடையேயான ஃபோர்த் ரோட் பாலம் அடங்கும்.
பேருந்துகளில் சென்சார்கள் நிரம்பியிருக்கும். அவை முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட வீதிகளில் பாதுகாப்பு ஓட்டுநர் தலையிடவோ அல்லது கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளவோ இல்லாமல் இயக்க உதவும்.
பயணிகள் ஏறத் தொடங்கும் போது, பேருந்துகள் பாலத்தின் குறுக்கே குறைந்தது 14 மைல்கள் வரை 36 பேரை ஏற்றிச் செல்லும் சேவை திறனை வழங்கும். மேலும் ஒரு வாரத்திற்கு 10,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.