டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டார்.
தொகை பரிமாற்றம், மஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்துவது யார் போன்ற விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தை விபரம் வெளியானதும் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் டுவிட்டர் பங்கு விலை 3 சதவீதம் அதிகரித்தது.
சமீபத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து எலான் மஸ்க் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், டுவிட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன்பின், டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டொலர்களுக்கு வாங்க முன்வந்தார்.
இதையடுத்து நிறுவனத்தை அவர் கையகப்படுத்த இயலாத வகையில் பங்கு ஒழுங்காற்று விதிமுறைகளின் கீழ் டுவிட்டர் நிர்வாகம் தடைகளை ஏற்படுத்தியது.
எனினும், எலான் மஸ்க் அல்லது இதே போன்ற கையகப்படுத்தும் நோக்கத்துடன் முன்வரும் வேறு ஏதேனும் முதலீட்டாளரை நிரந்தரமாகத் தடுத்துவிட முடியாது என்ற நிலையில், டுவிட்டர் நிறுவனம் மனம் மாறியது.