பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையை வெளியேறுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மைனா கோ கம என இந்த ஆர்ப்பாட்டக் களத்திற்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், அங்கு மூவர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி அவர்கள் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போராட்டக்காரர்கள் அலரிமாளிகையின் முன்பாக நடைபாதையில் அமர்ந்திருப்பதைத் தடுக்க நான்கு பேருந்துகள் மற்றும் ஒரு டிரக்கை பொலிஸார் இரண்டு பக்கங்களிலும் நிறுத்தியுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அத்தோடு, அரசாங்கத்துக்கு எதிரான கோசங்களை எழுப்பும்போது அதனை தடுக்கம் வகையில் அலரி மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் சத்தமாக பிரித் ஓதப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், ஏற்பாட்டாளர்கள் பேருந்துக்கும் டிரக் வண்டிக்கும் இடையே கூடாரம் அமைத்து தங்கள் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
எதிர்ப்பாளர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் படத்தை அருகிலுள்ள விளக்குக் கம்பத்தில் தொங்கவிட்டுள்ளதுடன், படத்தின் இருபுறமும் இரண்டு சிறிய வெள்ளைக் கொடிகளை ஏற்றியுள்ளனர்.
அருகில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளில் அரசாங்கத்துக்கு எதிரான பதாகைகளையும் ஒட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.