போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த ரஷ்யாவின் வெற்றிதினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய தூதர் மீது எதிர்பாளர்கள் சிவப்பு சாயம் வீசி தாக்குதல் நடத்தினர்.
வார்சாவில் உள்ள சோவியத் இராணுவ நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக சென்ற ரஷ்ய தூதர் செர்கய் ஆன்ட்ரீவ் மீதே அங்கு கூடியிருந்த ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் ஆதரவாளர்கள், எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அங்கு திரண்டிருந்த உக்ரைன் ஆதரவாளர்கள், கைகளில் உக்ரைன் கொடியை ஏந்தியபடி ரஷ்யத் தூதரைப் பார்த்து, ‘பாசிஸ்ட்’, ‘கொலைகாரர்’ என கோஷமிட்டனர். அப்போது சிலர் தூதர் மீது சிவப்பு சாயத்தை வீசினர்.
இந்த சம்பவம் குறித்து ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜக்காரோவா கூறுகையில், ‘இந்த போராட்டம், ஏற்கனவே உள்ள ஒரு விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேற்கு உலக நாடுகள் நாசிசத்தை புதுப்பிக்க புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளன. உக்ரைன் நாஜிகளால் கைப்பற்றப்பட்டுவிட்டது என ரஷ்யா பலமுறை கூறி வந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என கூறினார்.
இந்த போராட்டத்திற்கு பின்னர் போலந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாவல் ஜெலவ்ஸ்கி கூறுகையில், ‘போலந்துக்கான ரஷ்ய அதிகாரி மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு ரஷ்யா கொடுக்க இருக்கும் பதிலடியை எதிர்கொள்ள நாடு தயாரக வேண்டும்’ என கூறினார்.
இரண்டாம் உலகப்போரில் நாஜிப் படைகளுக்கு எதிராக ரஷ்யா பெற்ற வெற்றியை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 9ஆம் திகதியை ரஷ்யா வெற்றி தினமாக கொண்டாடி வருகிறமை குறிப்பிடத்தக்கது.