நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் காரணமாக நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு நகர் பகுதி உட்பட பல பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுவதுடன் ஊரடங்கு சட்டத்தினை மீறிய வகையில் வந்தவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்.
மட்டக்களப்பு நகருக்கு நுழைவாயிலில் போக்குவரத்து பொலிஸார்,பொலிஸார்,படையினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதை காணமுடிகின்றது.
இதேநேரம் நேற்று மாலை மட்டக்களப்பின் சில பகுதிகளில் பதற்ற நிலைமை ஏற்பட்டதையும் அவதானிக்கமுடிந்தது.
நேற்று மாலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் இல்லத்திற்கு முன்பாக பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறப்போவதாகவும் பொதுமக்கள் இராஜாங்க அமைச்சரின் இல்லத்தினையும் முற்றுகையிடப்போவதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலியைடுத்தே இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதன்போது அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டதுடன் அப்பகுதியில் குழுமி நின்றவர்களும் சிறிதுநேரத்தில் கலைந்துசென்றனர்.
இதேநேரம் நேற்று இரவு கல்லடி பாலத்திற்கு அருகில் விசேட சோதனை நடவடிக்கைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டதுடன் அத்தியாவசியமில்லாமல் மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் வாகனங்கள் திருப்பியனுப்பிவைக்கப்பட்டன.
இதேநேரம் மட்டக்கள்பு நகரின் புறநகர்ப்பகுதியில் மக்கள் வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதை காணமுடிந்தது.