நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்று மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய புதிய பிரதமரும், அரசாங்கமும் இந்த வாரத்தில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று(புதன்கிழமை) இரவு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை நியமித்ததன் பின்னர், அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் உள்ளடக்கத்தை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கி இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவியை நீக்குவதற்கான கோரிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசாங்கம், நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், அனைத்து தரப்பினருடனும் இந்த விவகாரம் குறித்து விவாதித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் மக்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் அதேவேளையில், நாட்டை வீழ்ச்சியடையச் செய்யாமல், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்குவதற்கான அரச பொறிமுறையை தொடர்ந்தும் பேணுவதற்கு உங்கள் ஆதரவை நான் கோருகிறேன் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வன்முறைக்கான மூல காரணத்தை வன்மையாகக் கண்டித்ததோடு, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொலைகள், தாக்குதல்கள், மிரட்டல் நடவடிக்கைகள், சொத்துக்களை அழித்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொடர் கொடூரமான செயல்களை நியாயப்படுத்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுகள் நடந்த தருணத்திலிருந்து, பாதுகாப்பு செயலாளர், ஆயுதப்படைகளின் தளபதிகள், உளவுத்துறை தலைவர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டு, நாட்டில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு.
வன்முறையை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு சிறிலங்கா காவல்துறை மற்றும் முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுகளுக்குத் திட்டமிட்ட, உதவிய, ஊக்குவித்த மற்றும் தொடர்புள்ளவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததுடன், நாசகார செயல்களில் இருந்து அனைவரும் விலகுமாறு கேட்டுக் கொண்டார்.
வெறுப்புணர்வை பரப்ப முயற்சிப்பவர்களின் செயல்களை வன்மையாகக் கண்டிக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து பொறுப்புள்ள குடிமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.