பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் அரசாங்கத்தின் கீழ் நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில் வரவு, செலவுத்திட்டத்தின் துண்டுவிழும் தொகை 2.56 டிரில்லியனாக ரூபாவாக உயர்ந்துள்ளது.
இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாகும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாகிஸ்தான் ஏற்கனவே வெளிநாட்டுக் கடனில் பாரிய அதிகரிப்புடன் போராடி வருவதால், அதன் பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் வரவுசெலவுத்திட்டத்தின் துண்டுவிழும் தொகையானது, எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த 5.6 டிரில்லியன் ரூபாவாக, உயரக்கூடும் என்று அந்நாட்டு அரசாங்கம் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.
வரவு,செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை அதிகரிப்பதற்கான இந்த கணிப்புக்கு முக்கிய காரணம், நிதியில்லாத மானியங்கள், அதிகளவு செலவுகள், கடன்களை மீளச் செலுத்த இயலாமை.
விரும்பிய வருவாய் உபரியை உருவாக்க மாகாணங்கள் மற்றும் மத்திய வருவாய் கட்டமைப்புக்களால் இயலாத நிலைமையால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் கடன்களுக்கான செலவீனங்கள் அதிகரித்துள்ளமை என்பன காரணமாகின்றன.
பாகிஸ்தானின் நிதி அமைச்சு, நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மத்திய வரவுசெலவுத்திட்டத்திற்கான துண்டுவிழும் தொகை 3.1 டிரில்லிய ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் இதில் மாகாண பங்களிப்பு 0.6 டிரில்லியன் ரூபா வருவாய் உபரியாககாணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளதோடு, மாகாண பங்களிப்பின் ஒட்டுமொத்த பற்றாக்குறை 2.56 டிரில்லியன் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் இதேகாலக்கட்டத்தில் ஒட்டுமொத்த துண்டுவிழும் தொகையானது 1.65 டிரில்லியன் ரூபாவாக அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 சதவீதமாக இருந்தது.
தேசிய கணக்குகளை மறுசீரமைப்பதன் மூலம், நடப்பு நிதியாண்டில் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 63.978 டிரில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் வழங்கிய கணிப்பின்படி, நடப்பு நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களில் துண்டுவிழும் தொகை 3 டிரில்லியன் ரூபா அதிகமாக உயரக்கூடும்.
மத்திய அரசின் செலவுகள் 5.94 டிரில்லியனாக இருப்பதால், சிவில் அரசாங்கத்தை நடத்துதல், சம்பளம், ஓய்வூதியம், மானியங்கள் மற்றும் பிற கடமைகள் உட்பட மற்ற அனைத்து செலவுகளையும் சமாளிக்க கடன் பெறுவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது.
பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலை கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் எழுச்சியால் மறைக்கப்பட்ட நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கம் பல தசாப்தங்களாக இல்லாத பொருளாதார பேரழிவை இப்போது முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
பாகிஸ்தான் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், நிதி தொடர்பான கூட்டாட்சி ஆலோசகராகவும், பாகிஸ்தான் முதலீட்டு வாரியத்தின் தலைவராகவும், சர்வதேச நாணய நிதியத்தில் பொருளாதார நிபுணராகவும் பணியாற்றினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.