வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழர்களின் விடுதலைக்காக பயனிப்பதே முள்ளிவாய்க்கால்போன்ற இன அழிப்பில் ஆகுதியாகியவர்களுக்கு செய்யும் கைமாறு என மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் எம்.வினோராஜ் தெரிவித்தார்.
வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் அன்னதான நிகழ்வொன்றும் நேற்று (புதன்கிழமை) ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் செயலாளர் சதீஷனின் ஒருங்கிணைப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் கே.வினோராஜ் மற்றும் வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைசெய்யப்பட்ட ஆத்மாக்களின் சாந்தி வேண்டி விசேட பூஜையில் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் எம்.வினோராஜ், ”உலகெங்கும் வாழும் தமிழர்களின் நீங்காத,அழிக்கமுடியாத நினைவுகளை இன்றைய தினம் கொண்டுள்ளது.இந்த நாட்டில் சுதந்திரத்திற்காக போராடிய சொந்த இனத்தையே கொத்துக்கொத்தாக கொன்றொழித்த நாடாக இந்த நாடு காணப்படுகின்றது.
தமிழர்கள் இந்த நாட்டில் ஏனைய இனங்களைப்போன்று சுயகௌரவத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே போராடினார்கள்.ஆனால் எங்களின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு எங்கள் மீது யுத்தம் திணிக்கப்பட்டபோது அதனை எதிர்கொண்டவர்கள் நாங்கள்.இதன்மூலம் பாரிய இன அழிப்பினை எதிர்கொண்டவர்கள்.
21நாடுகள் இணைந்து எம்மீது படுகொலைகளை அரங்கேற்றினார்கள்.வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் சக்திகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து எமக்கான சுதந்திர போராட்டத்தினை ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கவேண்டும்.அதன்மூலமே முள்ளிவாய்க்கால்போன்ற இனஅழிப்பில் ஆகுதியாகியவர்களுக்கு செய்யும் கைமாறாகும்.இதனை உணர்ந்து எதிர்காலத்தில் அரசியல் தலைவர்கள் முன்செல்லவேண்டும்.” என தெரிவித்தார்.