எரிபொருள் பற்றாக்குறையானது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சையில் அது தாக்கத்தை செலுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
35 ஆயிரம் ஆசிரியர்களும் அதிபர்கள் பரீட்சைக் கடமையில் ஈடுபட உள்ளதாகவும், இதில் அநேகமானவர்கள் பல கிலோ மீற்றர்கள் பயணம் செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பரீட்சை கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் பெறுவதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ் ருவன்சந்திர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அவர்களுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று பரீட்சை நியமனக் கடிதம் மற்றும் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஊடாக அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.