மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காமல் இராஜாங்க அமைச்சு பதவி தங்களுக்கு வழங்க கூறி மட்டக்களப்பு இரண்டு அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாசஸ்த்தலம் முன்பாக பாய் போட்டு படுத்து கிடப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் நேற்று (புதன்கிழமை) எரிவாயு விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துடன் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது.
மட்டக்களப்பு நகரில் கடந்த ஏழு தினங்களுக்கு மேலாக எரிவாயுவினை எதிர்பார்த்துக்காத்திருக்கும் மக்கள் இரவு பகலாக வீதியில் உறங்கும் நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு பயனியர் வீதியில் எரிவாயுக்காக காத்திருக்கும் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு விநியோகம் செய்யும் இரண்டு முகவர்கள் பக்கச்சார்பாக செயற்படுதாகவும் இது தொடர்பில் அரசியல்வாதிகளோ,அதிகாரிகளோ பாராமுகமாகயிருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தினக்கூலிக்கு சென்று அன்றாடம் தமது குடும்பங்களை நடாத்துபவர்கள் நான்கு நாட்களுக்கும் மேலாக எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக இரவு பகலாக நிற்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் இதனால் குடும்பங்கள் பாரிய கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இதன்போது அங்குவந்த மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் மக்களுடன் நிலைமைகளை கேட்டறிந்துகொண்டதுடன் குறித்த பகுதியிலிருந்து மாவட்ட அரசாங்க அதிபரையும் தொடர்புகொண்டு மக்களின் நிலைமைகள் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
எனினும் தமது நிலைமைகள் குறித்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பொறுப்பற்ற வகையிலேயே செயற்படுவதாகவும் மக்களின் தேவையறிந்து செயற்படவில்லையெனவும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், ”தற்போதைக்கு எந்தவிதமான எரிவாயு இறக்குமதியும் இல்லை எதிர்வரும் நான்காம் திகதி பின்னர்தான் இலங்கைக்கு எரிவாயு கப்பல் வரக்கூடியதாக இருப்பதாக அறிய முடிகின்றது.
இரண்டு மாதங்களுக்கு ஒரு லட்சம் எரிவாயுக்கள் மாவட்டத்துக்கு தேவைப்படுகின்ற போதும் வெறுமனே 15,000 எரிவாயுகளை கொண்டுவந்து என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக மேல் மாகாணத்தில் அதிகளவான எரிவாயுக்கள் வழங்கி வைக்கப்படுவதாகவும் அங்குள்ள அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்காக பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடி குறித்த தீர்வுகளை பெற்றுக் கொள்கின்றார்கள்.
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அது முற்றிலும் வித்தியாசமான முறை காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே இந்த வீதியில் எரிவாயுவுக்காக காத்திருப்பவர்கள் வீதிகளை மறித்து போராட்டம் நடத்துவதன் மூலம் பாதிக்கப்படப்போவது மாவட்டத்தை சேர்ந்த எமது மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக எங்கேயாவது கதைப்பதை காணவும் இல்லை ஆனால் இன்று மக்கள் எரிவாயு காக வீதிகளில் பாய் போட்டு படுத்து உறங்கும் நிலையில் இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாசலுக்கு முன்பாக தங்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கக் கோரி பாய் போட்டு படுத்து கொண்டு இருக்கின்றார்கள் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.