பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்காமல், வானிலை ஆராய்ச்சிமைய அதிகாரிபோல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செய்படுகிறார் என்று விமல்வீரவன்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ” பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் சாவாலான காலமாகும் என்றும் மூன்று மாதங்களில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஏதோ வானிலை ஆராய்ச்சி மையத்தின் அதிகாரியைப் போன்றுதான் அவரின் உரை இருந்தது. அவர்கள்தான், அதிக அலைக்காரணமாக கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்தக் காலப்பகுதியில் மழை வீழ்ச்சி அதிகமாக இருக்கும் என்றும் கூறுவார்கள்.
இவ்வாறான அறிவித்தல்களை விடுக்க பிரதமர் எதற்கு. ஒரு சாதாரண ஊடகப்பேச்சாளர் ஒருவர் போதும்.
பிரதமர் பிரச்சினைகளைக் கூறிக்கொண்டிருக்காமல், இதற்கான தீர்வினை முன்வைக்க வேண்டும்.
மூன்று வாரங்கள் நெருக்கடியாக காலமாக இருந்தால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுங்கள். இதற்கு இவர்களிடம் பதில் இல்லை.
மக்கள் ஏற்கனவே கடுமையான சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், இவ்வாறான கருத்துக்கள் அவர்களை மேலும் பாதிப்படையச்செய்யும்.
குறைந்தது உணவுத்தட்டுப்பாட்டிலிருந்து எவ்வாறு விடுப்படுவது என்பது தொடர்பாகவேனும் குறிப்பிட வேண்டும்.
இவர்களிடம் பதிலும் திட்டமும் கிடையாது. மூன்று வாரங்களில் நெருக்கடி ஏற்படும் என அறிவிக்கப்பட்டமையால் வரிசையில் நிற்காத நபர்களும் இன்று வரிசையில் நிற்கிறார்கள்.
பணம் உள்ளவர்கள், தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இது ஒன்றும் விளையாட்டல்ல. மனித உயிர்களோடு விளையாட வேண்டாம். ” எனத் தெரிவித்தார்.