முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் பிரதமர், முன்னாள் நிதி அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, அலி சப்ரி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 39 பேருக்கு எதிராக இன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
கலாநிதி மஹீம் மெண்டிஸ் உட்பட திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மூவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல். டி.பி.தெஹிதெனிய உள்ளிட்ட ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த மனுவை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் திறமையற்ற பொருளாதார முகாமைத்துவம், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் சகிக்க முடியாத பணவீக்கத்தை உருவாக்கிய பொறுப்பற்ற முடிவுகளினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அந்த மனுவில் சந்தேகநபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.