எரிபொருள் இன்மையால் திருக்கோணேச்சரம் ஆலய வெளிப்பகுதி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞச ஈச்சரங்களில் ஒன்றானா வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேச்சரம் ஆலயத்திற்கு அதிகளவான மக்கள் சென்று வழிபடுவதுடன், சுற்றுலா பிரயாணிகளும் அங்கு அதிகளவில் சென்று வருகின்றமையானது வழக்கமானது.
இந்த நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் செல்வது மிகக்குறைவாக காணப்படுகின்றது. சுற்றுலா பிரயாணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால் கோவில் வணக்க பகுதிக்கு வெளியே காணப்படும் வர்த்தக நிலையங்கள் பல பூட்டப்பட்டு காணப்படுகின்றது.
அதேவேளை, தமக்கு வர்த்தகம் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும், கிடைக்கும் வருமானம் நாளாந்த செலவுகளிற்கே போதுமானதாக இல்லை எனவும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் பலர் அனுராதபுரம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான பாதிப்பு நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியினால் வர்த்தகங்கள், சுயதொழில் முயற்சியாளர்கள், சுற்றுலா துறையினர் என பல்வேறு தரப்பினர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.