போலந்தில் அமெரிக்கா நிரந்தர இராணுவ தளத்தை அமைக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இதுவரை துருப்புக்கள் சுழற்சி முறையில் மட்டுமே இருந்துவந்த நிலையில், நேட்டோவின் கிழக்குப் பகுதியில் அமெரிக்கா தளத்தை நிறுவுவது இதுவே முதல் முறை.
ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டின் போது, உரையாற்றுகையிலேயே பைடன் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நேட்டோ வலுவானது மற்றும் ஒன்றுபட்டது, இந்த உச்சிமாநாட்டின் போது நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம், நாங்கள் எங்கள் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் போகிறோம். மேலும், போலந்தில் ஒரு நிரந்தர தலைமையகத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது.
பிரித்தானியாவில் கூடுதலாக 2 எப்-35 ரக போர் விமான படைகளை அனுப்ப உள்ளது. கிழக்கு பகுதி முழுவதும் அமெரிக்க – நோட்டோ அமைப்பினை வலுப்படுத்த உள்ளோம். பால்டிக் பிராந்தியத்திற்கு சுழற்சி முறையில் வீரர்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது’ என கூறினார்.
இதற்கிடையில், 30 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பின் மாநாட்டின் போது, ‘நேட்டோ உறுப்பு நாடுகளின் தலையாய மற்றும் நேரடி அச்சுறுத்தலாக ரஷ்யா திகழ்கிறது’ என்று பிரகடனப்படுத்தப்பட்டது.